Sunday, August 28, 2011

ஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்

கடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Thursday, May 19, 2011

கூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

மேதினத் தியாகிகளின் கனவை நனவாக்குவோம்

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாளுக்காக போராடி அதனை வென்றெடுத்த தினமே மேதினம். 8 மணி நேர வேலை என்பது ஏதோ போராடிய தொழிலாளரின் மனதில் அப்போது தன்னிச்சையாக உருவானதல்ல. மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதன் ஒரு மனிதனாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, மீதமுள்ள 8 மணி நேரம் சமூக ரீதியான வி­சயங்களில் ஈடுபாடு என்ற வரையறை வேண்டும் என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கை வைக்கப்பட்டது. 


அக்கோரிக்கையை முன்வைத்த போராட்டம் முதன்முதலில் இன்று குபேரபுரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல தொழில் நகரங்களில் 19 வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியது. அக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட உடன் அதில் பொதிந்துள்ள நியாயத்தை உணர்ந்து முதலாளி வர்க்கம் 8 மணிநேர வேலை நாளை அறிமுகம் செய்து விடவில்லை. மாறாக 1886 மே முதல் நாளன்று 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையை வைத்துப் போராடிய தொழிலாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்க மே 4ம் நாள் சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்தது. அதற்குத் தலைமை தாங்கிய பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், பி­ர், லிங்க் மற்றும் எங்கல் என்ற 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்த ஐவரில் ஒருவரான லிங்க் முன்கூட்டியே தற்கொலை செய்து கொண்டதால் நான்கு பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் அதில் ஈடுபட்ட வேளையில் கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அதிகார மையங்களை எதிர்க்கும் அனார்க்கிஸ்டுகளாகவே இருந்தனர். 

Friday, April 22, 2011

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் "108" திட்டம். 

வசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
"நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு" என்கிற மக்களின் நம்பிக்கையை பெற வாய்ப்புள்ள திட்டமாக இருப்பதால் இந்தத் திட்டத்தை எந்த அரசாலும் இனிமேல் கைவிடவே முடியாது. 

ambulance_108ஏற்கனவே நல்ல ஊதியத்தில் பணி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் ஒட்டுநர்களாகவும் (997) பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிக் கல்வி பயின்ற இளைஞர்களும், இளம் பெண்களும் முதலுதவிப் பணியாளர்களாகவும்(1008), கணிணிக் கல்வி பயின்றோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு மேற்கூறிய காரணங்களே உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

Friday, March 18, 2011

"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம்"

                                                            -  கருப்பன்.சித்தார்த்தன்

நாடெங்கும் பயிர் பச்சைகளை அரித்து தின்னும் 
வெட்டுக்கிளிகள் . இந்த வெட்டுக்கிளிகளை வேட்டயாடித்தின்று இல்லாமல் செய்யும் மஞ்சக்காட்டு மைனாக்களோ கூண்டுக்குள். வெட்டுக்கிளிகள் பன்மடங்காய் பல்கி பெருகி பயிர்பச்சைகள் அறவே அழித்து  நாசப்படுத்த வேண்டும். கூண்டுக்குள் அடைக்கபட்டிருக்கிற மைனாக்களையும் சூப் வைத்து குடித்து விட வேண்டும். இதுதான் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனப் பெருங் கொள்ளையர்களின்     நலனுக்கு உகந்தது. இவர்களுக்கு உகந்த எது ஒன்றும் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியார்களுக்கும் உகந்ததே என்பது நமக்கு பழக்கப்பட்ட விஷயம் தானே ?

இன்று தமிழகத்தில் முப்பது,நாற்பது சதவிகித மக்களுக்கு நரம்பியல் கோளாறு.இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறியல்,குழந்தைகள் நலத்தில் சிக்கல், மூட்டு மாற்று அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு சிகிட்சை,தசை அமுகல் பிரச்சனை என்று பல நூறு உடற்கோளாறுகள்.

வெட்டுக்கிளிகளை வேட்டையாட எப்படி வலை வீச வேண்டா
மோ  , இந்த உடற்கோளாறுகளை களைய ஊசி மருந்து வேண்டாம். மாத்திரை மருந்து வேண்டாம், குறிப்பிட்ட நரம்புகள் , தமனிகள், தசைகள், சதைகள், மூட்டுக்கள் இவைகளை அதனுடைய போக்கில் இயக்கிட கண்டுபிடிக்க பட்டிருக்கிற  மெக்கானிச அடிப்படையில் தடவி, வருடி , உருவி, ஆட்டி அசைத்து, மடக்கி, நீட்டி, அவைகளை அதன் போக்கில் இயங்க செய்தாலே போதும். மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற இந்த உடற்கோளாறுகள் இல்லாமல் போய்விடும். இதற்கான முறையான பாடத்திட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கிற நாலரையாண்டு பட்டப்படிப்பே பிசியோதெரப்பி படிப்பு.

Friday, March 11, 2011

ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்

இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும் 
அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும்  மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போ  வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ  அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.

Thursday, February 24, 2011

சுமங்கலி திட்டம் என்னும் கொத்தடிமை கொடுமை

ஈரோடு, மதுரை ,விருதுநகர், தாராபுரம், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை முதலாளிகள் கொள்ளை லாபம் குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் நமது இளம் தலைமுறை பெண்கள் தான். 12 முதல் திருமணம் ஆகும் வரை இருக்கும் பெண்களை  இந்த திட்டத்திற்கு தரகர்கள் மூலம் கிராமப்புரங்களில்  இருந்து தெரிவு செய்து அவர்களை கொத்தடிமைகளாக தொழிற்சாலைகளிலே தங்க வைத்து சுரண்டும் கொடுமை இங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மிகக்குறைந்த தொகைக்கு 4 வருடகாலம் வரையிலும் ஒப்பந்தம் போடும் முதலாளிகள், அந்த ஒப்பந்த காலத்திற்கு முன்பே அவர்களை எதாவது ஒரு காரணம் சொல்லி வெளியேற்றும் சதியை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றன.  அதை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் அம்பலப்படுத்தி அரசை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய பொறுப்புணர்வுள்ள தொழிற் சங்கங்கள் முதலாளிகளிடம் கமிசன் வாங்கிகொண்டு தூங்கி கொண்டுள்ளது.

தொழிலாளர் கட்சி என்று சொல்லி கொண்டுள்ள CPI , CPI (M ) போன்றவை ஜெயலலிதாவுடன் தேர்தல் பேரம் பேசிக்கொண்டுள்ளன. படிக்க வேண்டிய இளம் பிஞ்சுகள் இவ்வாறு சொல்லென  துன்பங்களை தாங்கி கொண்டு வேலை செய்வது நமது அறிவி ஜீவிகளின் காதுகளுக்கு எட்டவே எட்டாது .  சுமங்கலி திட்டத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்துவதும் , அதில் மாட்டிக்கொண்டுள்ள தொழிலாளிகளை மீட்டெடுப்பதும்  ,உரிய இழப்பீடுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பதும் நமது கடமையாகும்.

108 அம்புலன்ஸ் - தொழிலாளர்களை பாடு படுத்தும் அரசு


108  ஆம்புலன்ஸ் என்பது 'மக்களின் உயிர் காக்கும் தோழன்' என்று அரசு விளம்பரப்படுத்துகிறது ஆனால் அந்த தோழர்களின் வாழ்க்கையை எப்போதும் இருண்ட பக்கமாகவே   வைத்திருக்கிறது அதில் வேலை செய்பவர்களுக்கு  ஆள் எடுக்கும் போது கொடுத்த எந்த உறுதியையும் காப்பாற்றவில்லை. 12  மணி நேரம் வேலை ,  ஒ.டி. இல்லை என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற கொடுமைக்களை 108 அம்புலன்ஸ் நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இழைக்கிறது. அந்த கொடுமைகளை  நாம்  எதிர்த்து குரல் கொடுப்போம். 

தமிழகத்தை சேர்ந்த முருகையா லிபிய படைகளால் கொல்லப்பட்டார் - மற்ற தமிழர்களின் நிலையும் அபாயகரமாகவே உள்ளது

திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா  லிபிய நாட்டில் கடாபியின் ஏவுதலால் ராணுவம்  நடத்திய  காட்டுமிராண்டி தனமான  தாக்குதலில் உயிர் இழந்து உள்ளார்.முருகையா உள்ளிட்ட 26 இந்தியத் தொழிலாளர்களை, தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், லிபிய நாட்டில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்காக அமர்த்தி உள்ளது.அவர்கள் ஏற்கனவே அங்கு அபாயகரமான் சூழ்நிலையில் பனி செய்து வருகின்றனர். தற்போது கடாபியின் கொடுகோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர், கடாபியும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளான் .  பிப்ரவரி 22 ஆம் நாள் லிபிய அரசுப் படைகள் தொழிலாளர்கள் தங்கிய இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். தொழிலாளர்கள் வெளியேற முயன்றபோது, திடீரென ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்து உள்ளார். 

இந்தத் தகவலை, லிபியாவில் இருந்து தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.ஆனால் லிபிய அரசு இந்த உண்மையை மறைத்து முருகையா விபத்தில் இறந்தார் என்று கூறி உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையும் அதை ஏற்றுக்கொண்டு, முருகையா விபத்தில் இறந்ததாகவே கடாபியின் வாசகத்திற்கு ஒத்து ஊதுகிறது.முருகையாவின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற தமிழர்களும் பத்திரமாக மீட்க்கபடவேண்டும்.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான பணிப்பாதுகாப்பு வேண்டும்

பெருநகரங்களில் தங்கி வீட்டு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலனவர்கள் திருமணமாகாத 12 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களே. அவர்களுக்கு வேலை நேரம் என்பது காலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை என எந்த ஈவு இரக்கமும் இன்றி சுரண்டப்படுகின்றனர். அதற்கு அவர்களுக்கு சம்பளமாக ரூ.2 ,000 /-ற்கு  குறைவாகவே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சரியான உணவு தரப்படுவதில்லை மீதம் இருக்கும் உணவோ அல்லது பழையதோ தான் அவர்களுக்கு உணவாக தரப்படுகிறது. அவர்கள் வரைமுறை இல்லாமல் மாட்டை விட அதிகமாக வேலை வாங்குகின்றனர். திருட்டு பட்டம் எளிதில் அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது,அதுமட்டுமில்லாமல் அவர்கள் பெரும்பாலனவர்கள் இளம் பெண்கள் என்பதால் அவர்கள் உரிமையாளர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், அதை எதிர்ப்பவர்களை திருட்டு குற்றம் சுமத்தி அடித்து வெளியேற்றுவதும் நடைபெறுகிறது .இது போல் பணியாற்றும் பெண்கள் அனைவருமே கல்வியறிவு இல்லாத  குக்கிராமங்களை சேர்ந்தவர்கள் , அவர்களுக்கு சட்டப்படி பணிப்பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை ஆகும் , அனால் அரசு ஏழைகளின் குரலுக்கா மதிப்பு கொடுக்கும். இது போல பாதிக்கப்படும் அபலை பெண்களின் பணிப்பாதுகாப்புக்கும்   , உயிர் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுக்க நாம் ஓன்று பட்டு குரல் எழுப்ப வேண்டும். அந்த உழைக்கும் மகளிரின் உரிமைக்கு கரம் கொடுப்போம். அவர்களின் மீது காட்டுமிராண்டி தனமாக கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு எதிர்த்து போராடுவோம்.

Wednesday, February 9, 2011

நீதித் துறை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்


ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள பெருமளவு வித்தியாசத்தை சரிபடுத்தக் கோரி மாவட்டத்தில் நீதித் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை (பிப். 10) அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.  மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இ. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலர் ஜி. சீனிவாஸ், பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ஜி. ரகுநாதன், எஸ். பாபுஜி சிவப்பிரகாஷ், எஸ். திப்பு, இணைச் செயலர்கள் ஏய பிரேமா, வி.பி. சண்முகசுந்தரி, கே. சேதுராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  தமிழ்நாடு நீதித் துறை ஊழியர் சங்க மாநில மையத் தீர்மானப்படி நீதியரசர் கே. ஜெகநாத் ஷெட்டி அளித்த பரிந்துரையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  6-வது ஊதியக்குழுவில் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை சரிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை (பிப். 10) மாவட்ட நீதித் துறை அனைத்து ஊழியர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

Tuesday, February 8, 2011

108 அம்புலன்ஸ் - தொழிலாளர்களை பாடு படுத்தும் அரசு


108  ஆம்புலன்ஸ் என்பது 'மக்களின் உயிர் காக்கும் தோழன்' என்று அரசு விளம்பரப்படுத்துகிறது ஆனால் அந்த தோழர்களின் வாழ்க்கையை எப்போதும் இருண்ட பக்கமாகவே   வைத்திருக்கிறது அதில் வேலை செய்பவர்களுக்கு  ஆள் எடுக்கும் போது கொடுத்த எந்த உறுதியையும் காப்பாற்றவில்லை. 12  மணி நேரம் வேலை ,  ஒ.டி. இல்லை என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற கொடுமைக்களை 108 அம்புலன்ஸ் நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இழைக்கிறது. அந்த கொடுமைகளை  நாம்  எதிர்த்து குரல் கொடுப்போம். 

Tuesday, January 25, 2011

முதலாளித்துவச் சுரண்டலின் பல பரிமாணங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் அங்காடித் தெரு

பொருள் முதல்வாதமும் கருத்து முதல்வாதமும்

பொருள் முதல்வாதம் சொல்கிறது மனிதனின் சிந்தனையும் கருத்துக்களும் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல், சமூகம் அவற்றில் நடக்கும் இயக்கங்கள், நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களின் பிரதிபலிப்பே என்று. அதாவது நான் என்ற பொருளாளாகிய ஒருவன் அவனிடம் இருக்கும் மூளை என்கிற பொருளாளாகிய ஒன்றைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள சூழலை மையமாக வைத்து பிரதிபலிப்பதே சிந்தனை என்பது பொருள் முதல்வாதிகளின் வாதம். ஆனால் கருத்து முதல்வாதிகளோ நான் சிந்திக்கிறேன் அதனால்தான் நான் இருக்கிறேன்; அதாவது நான் என்பதைவிடவும் என் சிந்தனைதான் முதன்மையானது என்று கூறுவர்.

சமூகத்தில் மதத்தைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை மானசீகமாக ஆட்படுத்தி ஆளும் வர்க்கங்கள் அடக்குமுறைப் போக்குகளையும் அதர்மமான சுரண்டலையும் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆளும் வர்க்கத்திற்கு இக்கருத்து முதல்வாதம் பேருதவி செய்தது. அதனை உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் சமூக மாற்றம் விரும்பியோர் இருந்தனர்.

அந்தக் கடமையை வரலாறு காணாத வீரத்துடனும் தர்க்க ஞானத்துடனும் கருத்து முதல்வாதம் முன்வைத்த அனைத்துக் கேள்விகளையும் நேருக்குநேர் எதிர்கொண்டு அசைக்க முடியாத வாதங்களின் மூலம் அக்கேள்விகளுக்கு விடையளித்து கருத்து முதல்வாதத்தை அதன் அரணிலேயே சந்தித்து முறியடித்தவர்கள் மாமேதைகள் மார்க்ஸ் , எங்கெல்ஸ் , லெனின் ஆவர்.

அறியுமுன் கருத்து (Pre Conception )

ஆனால் மனித மனதில் அவர்களை அறியாமலேயே ஒன்றை பகுத்தாய்வு மூலம் அறியும் முன்பாகவே நிறைந்திருக்கும் கருத்து என்பது உண்டு. இடைவிடாத பிரச்சாரம், பாரம்பரியமாகத் தொடரும் நம்பிக்கைகள் ஆகியவை அந்த அந்த அறியுமுன் கருத்து மனித மனதில் நிறைந்திருப்பதற்கான முக்கியக் காரணமாகும்.

மார்க்ஸ் முதல் லெனின் வரையிலான முதல் தரப் பொருள் முதல்வாதிகளின் தலையாய பணி கருத்து முதல்வாதப் பிதற்றல்களை எதிர் கொள்வதிலேயே மிகப்பெரிதும் செலவிடப்பட்டதால் இந்த அறியுமுன் கருத்து மனித மனதில் உருவாக்கும் பொய்த்தோற்றம் குறித்து ஓரளவு கருத வேண்டிய அவசியம் அம்மேதைகளுக்கு அவ்வப்போது ஏற்பட்டதே தவிர மிகப்பெரிதாக ஏற்படவில்லை. பின்னாளில் இந்த அறியுமுன் கருத்து அவர்கள் சாதிக்க விரும்பிய சமுதாய மாற்றப் போருக்கு எத்தனை எதிராக இருக்கப்போகிறது என்பதை அம்மேதைகள் அறிந்திருக்கவில்லை.

ஆம். இன்று நமது நாட்டில் இடதுசாரிகள் என்று செயல்படுவோர் பலரிடமும் ஒரு சிந்தனைப் போக்கு உள்ளது. அதாவது இந்த நாட்டின் பெரிய முதலாளிகள் மற்றும் அந்நிய முதலாளிகள் நமது எதிரிகள்; நமது போராட்டம் அடிப்படையில் அவர்களை எதிர்த்ததாகவே இருக்க வேண்டும். அந்தப் போராட்டத்தில் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ற ரீதியில் நமது நாட்டின் தேசிய மற்றும் சிறு முதலாளிகள் நம்மோடு இணைவதற்கான வாய்ப்புள்ளது. அந்த வகையில் அவர்கள் நம் நேச சக்திகள் என்ற விடுதலைப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட எண்ணம் ஒரு அறியுமுன் கருத்தாக அவர்களிடம் மிகப் பெரும்பாலும் இப்போதும் நிலவுகிறது.

‘இடதுசாரி’ மனதில் நின்று நிலவும் அறியுமுன் கருத்து முன்னிறுத்தும் சிக்கல்

ஆனால் மேலோட்டமாக விமர்சனப் பூர்வமின்றி நிகழ்வுகளை அதன் ஓட்டத்தில் பார்க்காமல் பார்க்கும் போது சரியானதாகப்படும் இந்த விஞ்ஞான பூர்வமாகப் பகுத்தாய்வு செய்யப்படாத கருத்து நடைமுறையில் இதனை மையமாக வைத்து இயக்கம் கட்டும்போது பல சிக்கல்களை தோற்றுவிக்கிறது.

அதாவது இவர்கள் கூறக்கூடிய அந்நிய முதலாளிகள் பெரிய முதலாளிகள் ஆகியோர் நேரடியாக நடத்தும் தொழிற்சாலைகளில் பொதுவாகத் தொழிலாளரை அணிதிரட்டப் பயன்படும் கூலி மற்றும் சம்பளப் பிரச்னைகளை மையமாக வைத்து தொழிலாளரை அணிதிரட்ட முடிவதில்லை. ஏனெனில் மற்ற சிறு தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படுவதைக் காட்டிலும் கூட இத்தொழிற்சாலைகளில் கூடுதல் சம்பளம் இதன் நிரந்தரத் தொழிலாளருக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் சமீப காலங்களில் இந்நிறுவனங்கள் உயர்தொழில் நுட்பம் கற்ற ஒரு சிலரைத் தவிர வேறுயாரையும் தங்களது தொழிற்சாலையின் நிரந்தரத் தொழிலாளர் சம்பளப் பட்டியலில் வைப்பதில்லை. முடிந்த அளவிற்கு தங்களது மையமான உற்பத்திப் பொருளுக்குத் தேவைப்படும் அனைத்து உதிரிகளையும் ஒப்பந்த அடிப்படையில் சுதேசிச் சிறுமுதலாளிகளுக்கு தயாரிக்கக் கொடுத்து விடுகின்றனர்.

இதற்கான காரணம் மிகமிகக் குறைந்த கூலி கொடுத்து ஒட்டஒட்டத் தொழிலாளரைச் சுரண்டி வேலை வாங்கி தாங்கள் அந்த உதிரி உறுப்புகளை நேரடியாகச் செய்தால் எவ்வளவு செலவாகுமோ அதைக் காட்டிலும் குறைந்த செலவிலேயே அவற்றைப் பெரும் முதலாளிகளும் , அந்நிய முதலாளிகளும் சிறு முதலாளிகளிடமிருந்து பெற்றுவிட முடிகிறது என்பதே.
அதே சமயத்தில் குறைந்த கூலியை மையமாக வைத்து பெரிய அளவில் தொழிலாளரை அணிதிரட்டும் வாய்ப்பு சிறு தொழிற்சாலைகளிலேயே உள்ளது. ஆனால் இங்கு சிறு முதலாளிகள் நேச சக்திகள் என்று கருதும் தற்போது இடதுசாரிகளை ஆதிக்கம் செலுத்தும் கண்ணோட்டம் தொழிலாளரை அணிதிரட்டுவதை மந்தப்படுத்துகிறது.
எவன் சுரண்டுகிறான் என்பதல்ல பார்க்கப்பட வேண்டியது சுரண்டல் உள்ளதா என்பதே

அதாவது சிறு முதலாளி பெருமுதலாளியால் சுரண்டப்படுகின்றானா இல்லையா என்பது பிரதானமல்ல. பிரதானமானது தொழிலாளி எத்தனை தூரம் சுரண்டப்படுகின்றானோ அதனை அடிப்படையாகக் கொண்டு அவனை அணிதிரட்டி போராடுவதுதான். ஏனெனில் சிறுமுதலாளிகளின் உள்ளகிடக்கை ஒருபோதும் தொழிலாளியாக வேண்டும் என்பதல்ல. மாறாக பெருமுதலாளியாக வேண்டும் என்பதுதான்.

ஆனால் முதலாளித்துவச் சுரண்டலின் ஏகபோகக் கட்டத்தில் ஏகபோகங்களுடனான போட்டியினைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிறுமுதலாளிகளில் ஒருசிலர் தொழிலாளிவர்க்க அணிகளுக்குத் தள்ளப்படுகின்றனர். அப்படித் தள்ளப்படுபவர்களும் மனநிலையில் பல முதலாளித்துவ குணாம்சங்களைக் கொண்டவர்களாகவே இருந்து கொண்டு தொழிலாளிவர்க்க இயக்கத்திற்குள் முதலாளித்துவ சிந்தனைப் போக்கை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். அதாவது அக்குணங்களை அவர்கள் சரிசெய்து கொள்ளாவிட்டால் பட்டாளிவர்க்க இயக்கத்தின் முக்கிய ஊழியர்களாக அவர்களால் ஆகமுடியாது என்ற நிலையே அவர்களைப் பொறுத்தவரையில் உள்ளது.
சிறு முதலாளிகள் பெருமுதலாளிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதனை எதிர்த்து அவர்கள் போராடட்டும்; அதனைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொழிலாளர் போராட்டத்தை மந்தப்படுத்த வேண்டுமென்பதில்லை.
சிறுமுதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டலை எதிர்த்து பொங்கி எழ உருவாகும் வாய்ப்பினைப் பயன்படுத்தி நாம் தீரமிக்க தொழிலாளிவர்க்கப் போராட்டங்கள் கட்டினால் அவற்றின் விளைவாக சிறுமுதலாளிகள் தொழிலாளருக்குத் தரவேண்டிவரும் கூடுதல் கூலியும் மேலான வேலைச் சூழ்நிலையுமே அவர்களுக்கு நெருக்கடியினைத் தோற்றுவிக்கும்; அதனால் எந்தப் பெருமுதலாளிகளுக்காக அவர்கள் வேலை செய்கிறார்களோ அவர்களை எதிர்த்த போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை சிறுமுதலாளிகளுக்கு உருவாகும்.
இந்திய உழைக்கும் வர்க்க இயக்கத்தில் உள்ள இந்த மையமான அம்சத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நல்ல வாய்ப்பினை நமக்கு தந்துள்ளது தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரு. வசந்தபாலன் அவர்களின் அங்காடித் தெரு திரைப்படம்.

எந்தவொரு வகையான செயற்கைத் தன்மையும் , மிகைப்படுத்துதலுமின்றி காலங்காலமாக சென்னை ரங்கநாதன் தெரு போன்ற இடங்களில் பெரிய கடைகளில் வேலை செய்யும் வறட்சி பாதித்த பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு சுரண்டப்படும் இளம் தொழிலாளரின் அவலநிலையின் தத்துரூபமான படப்பிடிப்பாக இது உள்ளது.
காட்டுச் சுரண்டலைச் சாஸ்வதமாக்கக் கடைப்பிடிக்கப்படும் யுக்திகள்
தொழிலாளரை பணியமர்த்துவதில் அதாவது அவர்கள் எந்தவகை பின்பலமும் அற்றவர்களாக தாங்கள் சம்பாதித்துத்தான் குடும்பத்தைக் காத்தாக வேண்டும் என்ற முழுமையான நிராதரவான நிலையில் இருப்பவர்ளாக உள்ளார்களா என்று பார்ப்பதில் தொடங்கி அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிமிர்ந்து எழுந்து விடாமல் இருக்கச் செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் அடக்குமுறை யுக்திகள் வரை முதலாளிகளால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து யுக்திகளும் மிகவும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கட்டுப்பாட்டை நிலைநாட்டுகிறேன் என்ற சாக்கில் நடத்தப்படும் பாலியல் பலாத்காரமும் வெளியில் யாருக்கும் தெரியாமல் காலங்காலமாக நடந்து கொண்டிருப்பது வெளிக் கொணரப்பட்டுள்ளது.

தானாகவும் கடிக்கும் கண்காணி நாய்

நாய் பல சமயங்களில் எஜமான் ஏவினால் கடிக்கும்; ஆனால் கடித்து ருசிகண்ட பின்பு அதாகவும் கூட சிலரைக் கடிக்கும். அதுபோல்தான் இந்திய ‘இடதுசாரி’களால் செல்லமாக நேச சக்திகள், சிறு உடமையாளர்கள் என்று அழைக்கப்படும் இப்படத்தில் வரும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்களில் முதலாளிகளால் கண்காணிகளாக நியமிக்கப் படுபவர்களின் நடைமுறைகளும் உள்ளன.
கட்டுப்பாட்டை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் தனது மன விகாரங்களை இஷ்டத்திற்குப் பிரதிபலிக்கவும் சபல சிந்தனைகளைத் தணித்துக் கொள்ளவும் அவர்களுக்கு முதலாளியால் தரப்படும் வாய்ப்பும் ஒரு கருதற்பொருளாக முதலாளிகளால் பாவிக்கப்படுகிறது. அதாவது இந்தக் கண்காணிகள் சம்பளத்திற்காக மட்டுமல்ல; சிறு வயது இளம் பெண்களிடம் அரசல் புரசலாகத் தவறாக நடந்து கொள்ள அவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பையும் மனதிற்கொண்டே இப்பணியில் நீடிக்கின்றனர்.

‘மாடர்ன் டைம்ஸ்’ சுரண்டலைக் காட்டிலும் கொடூரமான சுரண்டல்

நூற்றுக் கணக்கானோர் உட்காருவதற்கு கூட இடம் போதாது என்ற இடத்தில் உறங்கியாக வேண்டிய நிலையில் வேலையாட்கள் வைக்கப்பட்டிருக்கும் போக்கு , அதைப்போல் அவர்கள் குளிப்பதற்கு , மல ஜலம் கழிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அறவே போதாத வசதிகள் அதாவது அவர்களை அவர்களே நாங்களும் மனிதர்கள் தான் என்று எண்ண முடியாது , தாங்கள் எப்படியாகிலும் வாழ்ந்தாக வேண்டிய ஜென்மங்கள் என்று கருதும் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை நாம் நாகரீக உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்கச் செய்கிறது. மிகக் குறைந்த சாப்பாட்டு நேரம் அதில் நூற்றுக் கணக்கனோருடன் முண்டியடித்து சுகாதாரக் கேடான சூழ்நிலையில் சாப்பிட்டுவிட்டு வந்து பணியில் சேரவேண்டிய கட்டாயநிலை காட்டப்பட்டுள்ள விதம் சார்லி சாப்ளினின் மார்டன் டைம்ஸ் ஐ நினைவுப்படுத்தும் ஒரு அற்புதப் படப்பிடிப்பு. ஆனால் மாடர்ன் டைம்ஸ் எடுக்கப்பட்ட காலத்தில் கூட நிலவாத பெருங்கொடுமை , இச்சூழ்நிலையில் சாப்பிட்டுவரும் போது தவிர்க்க முடியாமல் ஏற்படும் தங்களது ஒவ்வொரு நிமிடத் தாமதத்திற்கும் ரூபாய் ஒன்று என்று தண்டம் செலுத்தவேண்டிய கோர நியதி.

முதலாளிகளின் எலும்புத் துண்டுகளுக்கு இரையாகும் காவல்துறை

உடமையாளர்களுக்கும் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறைக்குமுள்ள நெருங்கிய தொடர்பு; கொலையே நேர்ந்தால் கூட அதனை மூடிமறைக்க இடைவிடாமல் கிடைக்கும் கையூட்டைக் கருத்தில் கொண்டு இரையாகும் , துணைபோகும் காவல்துறை. எப்போதாவது இந்தக் கொடும் கொத்தடிமை சூழ்நிலையில் ஒரு ஸ்பார்டகஸ் உருவாகிவிட்டால் அவன் திருடன் என நிறுவனத்தால் முத்திரை குத்தப்பட்டு அதற்குக் காவல்துறையால் ஒப்புதலும் வழங்கப்பட்டு தெருவில் நிறுத்தப்படும் கொடுமை; இலவு காத்த கிளியாக எந்த இந்தத் தேசிய , குட்டி முதலாளிகளின் நேசத்திற்காக இந்திய
‘இடதுசாரி’களும் ‘கம்யூனிஸ்ட்’களும்” காத்துக் கிடக்கின்றனவோ அந்த நேசம் அங்கு கடை வைத்திருக்கும் அனைத்து முதலாளிகளிடமும் அதுவாகவே நன்கு மலர்ந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளரை யாரும் வேலைக்கு சேர்க்காமல் அல்லாட விடும் அவலம்;

கொடும் சுரண்டல் , கடுமையான அடக்குமுறைகளாலும் கருகிப் போகாத மனிதம்

இத்தனைக்கும் மத்தியிலும் கூட அந்த உழைப்பாளிகளிடம் ஊறித்ததும்பும் ஒரு வாழ்க்கை; நகைச்சுவையான கலந்துரையாடல்கள். மத்தியதர வர்க்க நொண்டி ஒழுக்க நெறிமுறைகளிலிருந்து விலகி நின்று தன் பழைய காதலனையும் தன் பழைய காதலியையும் தற்போதைய காதலர்கள் அசைபோட்டுக் கொள்ளும் அழகு அதாவது வாழ்க்கை தான் எதையும் தாக்குபிடித்து நிமிர்ந்து நிற்கும் தன்மைகளை எவ்வளவு கொண்டிருக்கிறது என்பதை உயர்த்திக் காட்டும் உன்னதம்.
நகரங்களில் நிலவும் இரவு நேரக் கிரிமினல் நடவடிக்கைகளால் பெண்கள் தனியாக மட்டுமல்ல தாங்கள் விரும்பியவர்களோடு கூட நடமாட முடியாதவையாக ஆகிவருவதும் , வாகனங்கள் மனிதர்களை அற்பப் புழுக்களாகக் கருதி ஓட்டப்படுவதால் நிகழும் கோர விபத்துக்களும் எந்த சினிமாத்தனமான மிகைப் படுத்துதல்களுமின்றி எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
விடுமுறை குறித்த தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர் துறையிருந்தும் அதற்கான அலுவலகங்கள் பெயர்ப்பலகைகள் ஆயிரக் கணக்கான அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தண்டச் சம்பளம் ஆகியவையிருந்தும் இதுபோன்ற நிறுவனங்களில் அறவே அமலாவதில்லை. அதனால் முறையாக விடுமுறை எடுத்து ஊர்வந்து வேண்டியவர்களைக் காணமுடியாத நிலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் தள்ளப்படுகின்றனர்.

அச்சூழ்நிலையை தன் அண்ணனைப் பார்க்க ஆசை ஏராளம் இருந்தும் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் கதாநாயகனின் தங்கை தன் அண்ணன் வேலை செய்யும் கடையில் பொருள் வாங்கியதற்காக வழங்கப்பட்ட பையை பொருள் வாங்கியவர்களிடம் இருந்து இரவலாகக் கெஞ்சிப் பெற்று அதனைப் பார்த்து ஆறுதலடைவது; காலொடிந்த நிலையில் இனிமேல் செயலிழந்த தனக்கு பணம் அனுப்பும் வாய்ப்பற்றவளாக மகள் ஆகிவிட்டாள் என்று தெரிந்தவுடன் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும் விதத்தில் இரக்கமற்ற காரியவாதியாக அவளைக் கைவிட்டுக் கிளம்பும் தந்தை; ஆனால் நெருங்கிப் பேசிப் பார்க்கையில் அப்படிப்பட்ட ஒரு வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவரே இவர், அதனால் தான் இது குறித்துத் தனக்குள்ளேயே தேங்கிக் கிடக்கும் வெறுப்புணர்வை தயங்காது வெளிப்படுத்துகிறார் என்று இவருக்குள்ளும் நிறைந்திருக்கும் மனிதத்தை வெளிப்படுத்தும் கதாநாயகியின் தந்தை குறித்த படப்பிடிப்பு எனச் சிறுசிறு காட்சி அமைப்புகள் மூலம் உழைக்கும் வர்க்கத்தில் ஊறித் ததும்பும் பாசமும் மனிதமும் வெளிப்படுத்தப் படுகிறது.

இடையூடாக வீட்டுவேலை செய்யும் காதாநாயகனின் தங்கை மூலமாக வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு நிகழும் பிரச்னைகளும் மக்களின் பார்வைக்கு முன் வைக்கப் படுகின்றன. இயற்கையில் உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் பருவமாற்றங்களை தீட்டு என்று சித்தரித்து அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்குப் புறமாக வீட்டு நாய் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் அறையைக் காட்டிலும் நெருக்கமானதும் அசுத்தமானதுமான அறையில் தள்ளிவைக்கும் கொடுமையைச் சித்திரிப்பதன் மூலம் ஜனாதன ஹிந்து தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் மக்களின் மனிதத் தன்மையற்ற பழக்க வழக்கங்கள் உரிய விதத்தில் சாடப்படுகிறது.

தலைமுறை இடைவெளி

அதே சமயத்தில் கெளஹாத்தியில் தன் மகளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டதால் உதவிக்கென்று காதாநாயகியின் தங்கையை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் வீட்டு எஜமானி அனுப்பும் போது இதுபோன்றதொரு பருவம் எய்துதல் என்ற ஒரு இயற்கை நிகழ்வுக்காகத்தானே தன்னை ஒதுக்கி வைத்தார்கள் என்ற எண்ணம் சிறிதுமின்றி அந்த அக்கா நல்லவர்கள் அவர்கள் என்னை நன்றாக வைத்துக் கொள்வார்கள் என்று அப்பணியை விரும்பி ஏற்றுச்செல்லும் தங்கை. இதன் மூலம் எஜமானத்துவம் மற்றும் சடங்குகள் சம்பிரதாயங்களில் ஊறி மனித நேயத்திற்கு எதிராக நிற்கும் பழைய தலைமுறையைப் பிரதிபலிக்கும் தாயும் அதிலிருந்து சற்றே மாறுபட்டு நிற்கும் புதிய தலைமுறையின் திரையில் காட்டப்படாத மகளும் முன்னிறுத்தப் படுகிறார்கள்.
இன்றைய முதலாளித்துவச் சுரண்டலின் தன்மையையும் அவலத்தையும் இந்தியாவில் இடதுசாரிகள் , கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் சிறு முதலாளிகள் நேசசக்திகள் , நிலவுடமைச் சூழல் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு நிலவுகிறது. என்றெல்லாம் கூறி மூடிமறைக்கின்றனர். அவர்கள் ஏற்படுத்தும் அனைத்துக் குழப்பங்களையும் , ஒரேயயாரு மணியான வசனத்தின் மூலம் இத்திரைப்படம் தெளிவு படுத்தி நாட்டில் ஒட்டுமொத்தத்திலும் நிலவுவது முதலாளித்துவச் சூழலே என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

விற்கத் தெரிந்தவனே வாழத் தெரிந்தவன்

தாடியுடன் சாலையோரத்தில் அமர்ந்து பொருள் விற்கும் கண் தெரியாத பெரியவர் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டு எந்தக் கடையிலும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாமல் அவரிடம் வந்து சோர்ந்து நிற்கும் படத்தின் கதாநாயகன் மற்றும் நாயகியிடம் கூறுவார் விற்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன் என்று. ஆம் தன்னிடமுள்ள எதையயல்லாம் சந்தைச் சரக்காக்கி விற்க முடியுமோ அதையயல்லாம் விலையாக்க முடிந்தவனே இச்சமூக அமைப்பில் வாழ முடிந்தவன். ஏனெனில் நிலவுடைமைச் சமூகச் சூழலின் உழைப்பாளியான பண்ணையடிமை தன் உழைப்பை அது விலைபோகுமிடத்தில் விற்க முடியாது. அது சமூகக் கட்டுப்பாடு; இப்படத்தில் காட்டப்படுவது போல் கெட்ட பெயர் சுமத்தி வேலை வாய்ப்பைப் பறிப்பதல்ல. இதுதான் மையமானது என்று ஆகிவிட்ட இன்றைய சூழல் அப்பட்டமான முதலாளித்துவச் சூழலாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?
வேலை கேட்டுவந்த ஒருவன் பாரமரிப்பின்றி நாற்றமெடுத்துக் கிடக்கும் கழிப்பறையை நாசூக்காக கட்டணக் கழிப்பறையாக மாற்றி அதிகச் சிரமமின்றி சம்பாதித்து ஒரு அரைக் கனவான் போல் நடத்தும் வாழ்க்கை இதை நிறுவ படத்தில் காட்டப்படும் ஒரு பொருத்தமான காட்சி.

இப்படத்திற்கு விமர்சனம் எழுதியிருந்த ஹிந்து நாளிதழ் ஒரு வியத்தைக் கோடிட்டுக் காட்டியிருந்தது. அதாவது இந்திய மக்களின் வறுமையையும் , அவலங்களையும் அன்னியநாட்டு இயக்குனர்கள் தான் படம் பிடித்துக் காட்ட முடியும் என்பதல்ல என்று வசந்த பாலன் இப்படத்தைத் தயாரித்ததன் மூலம் நிரூபித்திருக்கிறார் என்று அவ்விமர்சனம் கூறியிருந்தது. அனேகமாக ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்தை மனதில் நிறுத்தி இது சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

சுய இரக்கம் பச்சாதாபம்

உண்மையிலேயே மேலைநாட்டு இயக்குனர்கள் அணுகுமுறைக்கும் நமது அணுகுமுறைக்கும் இடையிலான வேறுபாடு இப்படத்திலும் சிறிதளவு இருக்கவே செய்கிறது. வகுப்புக் கலவரத்தில் ஏற்பட்ட தாயின் மரணம் , தங்களிடமிருந்த அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை இவை போன்ற தாங்கொண்ணாக் கொடுமைகள் கூட ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் முக்கிய பாத்திரங்களான சகோதரர்களிடையே ஒரு சுய இரக்கப் போக்கினையும் , பச்சாதாபத்தையும் உருவாக்கவில்லை. அவர்களின் போக்கு இந்த உலகம் ஒரு போர்க்களம் அதை எதிர்த்து வாழ முடிந்தவரை வாழ வேண்டும் என்பது போலவே இருந்தது. ஆனால் இப்படத்தில் அந்த சுய இரக்க , பச்சாதாபப் போக்கு மற்ற தமிழ்ப் படங்களில் காட்டப்படும் குமட்டல் வரும் அளவிற்கு காட்டப்படாவிட்டாலும் சிறிதளவு இருக்கவே செய்கிறது.

அரும்புவதாகவேனும் காட்டப்பட்டிருக்க வேண்டிய எதிர்க்கும் போக்கு

பொதுவாக இதுபோன்ற ஈவிரக்கமற்ற சுரண்டலையும் அதனைத் தங்கு தடையின்றி நடத்துவற்காகக் கட்டவிழ்த்து விடப்படும் நிறுவன ரீதியான அடக்குமுறைகளையும் மையமாகக் கொண்டு படம் எடுக்கையில் சில காட்சியமைப்புகள் மூலம் இதனை எதிர்க்கும் போக்கும் அரும்பத் தொடங்கியிருக்கிறது என்று காட்டத் தவறக் கூடாது. அதனை யதார்த்தத்திற்குப் பொருத்தமின்றி கொடுமைகளுக்கு எதிரான பெரும் எழுச்சி உருவாகிறது என்று காட்டத் தேவையில்லை. ஆனால் ஒருபோதும் இதுதான் விதி இதனை மாற்றவே முடியாது என்ற விதத்திலும் இந்த அவலங்கள் காட்டப்படக் கூடாது. அவ்வாறு காட்டினால் படம் பார்ப்பவரிடையே ஒரு மனச்சோர்வும் , கசப்பும் தோன்றும். அதற்கு இடமளிக்காமல் இக்கொடுமைக்கெதிராக பாதிக்கப் பட்டுள்ளோர் திரள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்ற வகையில் ஒரிரு சம்பவங்களைச் சேர்த்திருந்தால் படம் பார்த்துத் திரும்பும் போது இப்படம் தோற்றுவிக்கும் சிறிதளவு கசப்புணர்வும் மனச்சோர்வும் கூட இல்லாதிருந்திருக்கும். ஆம் அந்த வகையில் சார்ல்ஸ் டிக்கன்ஸின் அப்பட்டமான சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் போக்கிலிருந்து சிறிதளவு தாண்டியிருந்தால் இத்திரைப்படம் இன்னும் கூட மெருகேறிய ஒன்றாக , ஒரு சமுதாய கடமையினை இன்னும் தெளிவாகச் செய்த ஒன்றாக இருந்திருக்கும்.