தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் "108" திட்டம்.
வசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
"நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு" என்கிற மக்களின் நம்பிக்கையை பெற வாய்ப்புள்ள திட்டமாக இருப்பதால் இந்தத் திட்டத்தை எந்த அரசாலும் இனிமேல் கைவிடவே முடியாது.
ஏற்கனவே நல்ல ஊதியத்தில் பணி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் ஒட்டுநர்களாகவும் (997) பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிக் கல்வி பயின்ற இளைஞர்களும், இளம் பெண்களும் முதலுதவிப் பணியாளர்களாகவும்(1008), கணிணிக் கல்வி பயின்றோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு மேற்கூறிய காரணங்களே உந்து சக்தியாக இருந்திருக்கிறது.