Thursday, May 19, 2011

கூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

மேதினத் தியாகிகளின் கனவை நனவாக்குவோம்

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாளுக்காக போராடி அதனை வென்றெடுத்த தினமே மேதினம். 8 மணி நேர வேலை என்பது ஏதோ போராடிய தொழிலாளரின் மனதில் அப்போது தன்னிச்சையாக உருவானதல்ல. மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதன் ஒரு மனிதனாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, மீதமுள்ள 8 மணி நேரம் சமூக ரீதியான வி­சயங்களில் ஈடுபாடு என்ற வரையறை வேண்டும் என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கை வைக்கப்பட்டது. 


அக்கோரிக்கையை முன்வைத்த போராட்டம் முதன்முதலில் இன்று குபேரபுரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல தொழில் நகரங்களில் 19 வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியது. அக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட உடன் அதில் பொதிந்துள்ள நியாயத்தை உணர்ந்து முதலாளி வர்க்கம் 8 மணிநேர வேலை நாளை அறிமுகம் செய்து விடவில்லை. மாறாக 1886 மே முதல் நாளன்று 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையை வைத்துப் போராடிய தொழிலாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்க மே 4ம் நாள் சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்தது. அதற்குத் தலைமை தாங்கிய பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், பி­ர், லிங்க் மற்றும் எங்கல் என்ற 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்த ஐவரில் ஒருவரான லிங்க் முன்கூட்டியே தற்கொலை செய்து கொண்டதால் நான்கு பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் அதில் ஈடுபட்ட வேளையில் கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அதிகார மையங்களை எதிர்க்கும் அனார்க்கிஸ்டுகளாகவே இருந்தனர்.